ஈழத்துத் திரைத்துறையை மேம்படுத்தும் நோக்குடன் சுயாதீனமாக, இலாப நோக்கற்றுச் செயலாற்றும் திரைப்பட மதிப்பீட்டணி

  • Team9 members
  • Total reviews1
  • Version1.4
  • Last editedDecember 12th 2019

ஈழத்திரைக்கான திரைப்பட மதிப்பீட்டுப் பொறிமுறை

1. நோக்கம்

ஈழத்துச் சினிமாத் துறையில் தொடர்ச்சியாகத் தரமான திரைப்படங்கள் வெளிவரத் தொடங்கியுள்ள போதும், ஈழத் திரைப்படங்கள் வர்த்தக ரீதியாக இலாபம் அடைய முடியாத ஒரு நிலையே காணப்படுகிறது.

ஈழத்தமிழர்கள் எப்போதும் ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கு ஆதரவும் ஊக்கமும் நல்குபவர்களே.

ஆனால், தரமான திரைப்படங்கள் எவை என்பதை மக்கள் இலகுவாக அடையாளம் கண்டு கொள்வதற்கு ஏதுவான அளவுகோல் ஒன்றும் எம் மத்தியில் இல்லாமல் இருப்பது, தரமான படங்கள் வெளிவரும் போதும் அவை பொருளாதார ரீதியாக வெற்றியடையாது போவதற்கு ஒரு காரணமாகிவிடுகிறது.

அதேவேளை, “தரமற்ற” மற்றும் ஈழத்தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவிக்கும் படைப்புகளைப் போலிப் பரப்புரைகள் ஊடாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் நடவடிக்கைகளும் திட்டமிட்ட வகையில் ஆற்றப்படுவதால், பார்வையாளர் மத்தியில் ஈழத்திரை தொடர்பான ஓர் “ஒவ்வாமை” உணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது.

ஆகவே, தரமான திரைப்படங்களை, பொதுமக்கள் மதிப்பீடொன்றின் மூலம் இனங்காணச் செய்வதன் மூலம் அவற்றைப் பெருவாரியாகப் பார்க்கச் செய்யும் பொறிமுறை ஒன்றை ஈழத்திரை இணையம் ஒரு மதிப்பீட்டணி மூலம் உருவாக்க விழைகிறது.


2. மதிப்பீட்டணி உறுப்பினர் தன்மை

2.1 ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மீதும் ஈழத்து மக்கள் மீதும் கரிசனை கொண்டு பல்வேறுபட்ட தளங்களில், உதாரணமாக கலை, இலக்கிய, ஊடக, சமூக அறிவியல், மானுடவியல் போன்ற துறைகளில் பல தசாப்தங்களாகச் செயற்பட்டு வரும், சுயாதீனமான, குறைந்தது ஐந்து அல்லது ஒன்பது உறுப்பினர்கள் மதிப்பீட்டணியில் அங்கத்துவம் வகிப்பர்.

2.2 பாற்சமநிலை, வயது, மத, பிரதேச, புல, புலம்பெயர் வேறுபாடுகளைக் கருத்திற் கொண்டு மதிப்பீட்டணியின் உறுப்புரிமை தீர்மானிக்கப்படும்.

2.3 முதலாவது மதிப்பீட்டணியில் அங்கத்துவம் பெற விரும்புவோர் 2019 டிசம்பர் முப்பதாம் திகதிக்கு முன்னர் ஈழத்திரை இணைய ஆசிரியர் பீடத்தோடு தொடர்பு கொள்ளலாம். முதலாவது மதிப்பீட்டணியின் உருவாக்கத்தை ஈழத்திரை இணைய ஆசிரியபீடம் மேற்கொள்ளும் தெரிவு செய்யும். முதலாவது மதிப்பீட்டணிக்குப் பின்னர், அடுத்த மதிப்பீட்டணியின் உறுப்பினர்களை நடப்பில் இருக்கும் அணியே தேர்ந்தெடுக்கும்.

2.4 ஒவ்வொரு வருடமும் உறுப்பினர்களில் அரைவாசியினரை மாற்றம் செய்யவேண்டும். ஓர் உறுப்பினர் ஆகக்கூடியது இரண்டுவருடங்கள் தொடர்ச்சியாக அணியில் அங்கம் வகிக்கலாம். ஆனால், மீண்டும் தெரியப்படுவதாயின் குறைந்தது ஒரு வருடம் கழிந்த பின்னரே மீண்டும் மதிப்பீட்டணியில் அவர் இடம் பெறலாம்.

2.5 ஈழத்திரை இணைய ஆசிரிய பீடத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் மதிப்பீட்டணியில் அங்கத்துவம் வகிக்க இயலாது.

2.6 மதிப்பீட்டணியின் உறுப்பினர்களிடையே பிணக்கு ஏதும் ஏற்பட்டால் அதைத் தீர்த்துவைத்து அடுத்த கட்டத்தை நிர்ணயிக்கும் பொறுப்பு ஈழத்திரை இணைய ஆசிரிய பீடத்தைச் சாரும்.

2.7 ஏதேனும் காரணங்களால் அணியில் அங்கம் வகிக்க முடியாத நிலை தோன்றினாலோ, பணியில் இருந்து தற்காலிக ஓய்வு எடுக்கவேண்டிய தேவை ஏதும் ஏற்பட்டாலோ, ஓர் உறுப்பினர் அணியின் இதர உறுப்பினர்களுக்கு அதை முற்கூட்டியே அறிவித்து பணியில் இருந்து தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ ஓய்வு பெற்றுக்கொள்ளலாம்.

2.8 அணியின் உறுப்பினர்கள் பணிக்காலத்திலோ, அதன் பின்னரோ, மதிப்பீட்டணியில் தாம் கடமைபுரிந்த காலத்தில் எடுத்த முடிவுகள் குறித்த விபரங்களை பொது வெளியில் எடுத்தாளக்கூடாது.

2.9 மதிப்பீட்டணி உறுப்பினர்கள் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்தோ, அல்லது அத் திரைப்படத்தில் தொடர்பு பட்டவர்களிடமிருந்தோ, எந்தவித சன்மானத்தையும் பெறக்கூடாது என்பது பொது விதியாகும். இந்த விதி மீறப்பட்டமை ஆதாரபூர்வமாகத் தெரியவந்தால் குறித்த உறுப்பினர் பதவியில் இருந்து உடனடியாக நீக்கப்படுவார். இது குறித்த மேலதிக முடிவுகளை இதர உறுப்பினர்கள் கூட்டாக மேற்கொள்ளலாம்.

2.10 ஈழத்திரை மதிப்பீட்டணி பேணவேண்டிய விழுமியங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ மதிப்பீட்டணியிலுள்ள உறுப்பினர்கள் யாரேனும் கொச்சைப்படுத்துவதான குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் பட்சத்தில், அணியின் ஏனைய உறுப்பினர்கள் அக்குற்றச்சாட்டை ஆதாரபூர்வமாக ஆராய்ந்து உறுப்புரிமை நீக்கம் பற்றிய தமது சிபாரிசை ஈழத்திரை இணைய ஆசிரிய பீடத்துக்கு வழங்கவேண்டும். அதை ஆராய்ந்து இறுதி முடிவெடுக்கும் பொறுப்பு ஆசிரிய பீடத்தைச் சார்ந்தது.


3. ஈழத்திரை மதிப்பீட்டணி பேணவேண்டிய விழுமியங்கள்

3.1 இலங்கைத் தீவின் வடக்குக்கிழக்கைத் தமது பாரம்பரிய தாயகமாகக் கொண்ட ஈழத்தமிழர் எனும் தேசம், முழுமையான சுயநிர்ணய உரிமைக்கும் தனித்துவமான இறைமைக்கும் உரித்துடைய தமிழீழம் என்பது, இறுதியும் அறுதியுமாக 1977ல் மக்கள் ஆணை பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானம் வெளிப்படுத்தும் அரசியல் வேணவா.

3.2 ஈழத்தமிழர் தேசத்தின் மக்கள் ஆணை பெற்ற அரசியல் வேணவா சுதந்திர தமிழீழம் மட்டுமே. இதற்கான மாற்று எதையும் மக்கள் ஆணை பெற்ற அரசியல் தீர்வாகக் கொள்ள முடியாத வகையில், இலங்கை ஒற்றை ஆட்சி அரசு, தான் ஆக்கிரமித்திருக்கும் தமிழீழத்தின் மீது தனது ஆறாம் சட்டத்திருத்த ஜனநாயக வேணவா மறுப்பைத் திணித்திருக்கிறது. இந்த வகையில், ஈழத்தமிழர்களின் வேணவா குறித்த கருத்துச் சுதந்திரம் இலங்கைத் தீவில் மறுக்கப்பட்டிருக்கிறது. எனவே, முழுமையான சுயநிர்ணய உரிமையின் பாற்பட்ட ஐ.நா. பொது வாக்கெடுப்பு ஒன்று நடாத்தப்படும் வரை வேறெந்தத் தீர்வையும் நிரந்தர அரசியற் தீர்வாகக் கொள்ள முடியாது.

3.3 வட்டுக்கோட்டைத் தீர்மானம் தொடங்கி முள்ளிவாய்க்கால் - நந்திக்கடல் ஈறாக பல வல்லாதிக்க சக்திகளையும் ஒருசேர எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்ட போதும், ஒருபோதும் ஈழத்தமிழர் இறைமையைச் சரணாகதி ஆக்காமல் அளப்பரிய அர்ப்பணிப்புகளுடன் முன்னெடுக்கப்பட்ட தன்னிகரற்ற போராட்டமானது, ஈழத்தமிழர் போராட்ட மாண்பின் உச்சமாகும்.

3.4 தமிழீழ விடுதலைப் போராட்டத்தையோ அதை முள்ளிவாய்க்கால் வரை முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகளையோ, தமிழீழ இறைமையின் குறியீடாக விளங்கும் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களையோ அறிவியல் ரீதியான விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டுக் கொச்சைப்படுத்தும் மனிதர்களும் படைப்புக்களும் ஈழத்திரை மதிப்பீட்டணியின் செயற்பாட்டுக்கு ஒவ்வாதவை.

3.5 ஈழத்தமிழர் அரசியல் வேணவாவையும் அவர்தம் போராட்ட மாண்பையும் இழிவு படுத்தாது அறிவியற் பண்புடனான கருத்துச் சுதந்திரம் ஈழத்திரை மதிப்பீட்டணியின் செயற்பாட்டுக்கு ஆரோக்கியமானது.

3.6 தமிழ் நாகரிகம் மத, நிற, பிரதேச, வர்க்க மற்றும் இன்ன பிற, உயர்வு தாழ்வுப் பேதங்களுக்கு அப்பாற்பட்ட மொழியை அடிப்படையாகக் கொண்ட சமத்துவத்துக்குரியது; உலக ஒப்புரவை வலியுறுத்துவது. ஈழத்தமிழர் பண்பாடு இந்த நாகரிகச்சிறப்பை மேலும் பண்படுத்தும் வகையில் கூர்ப்படைந்த ஒன்று என்பதைத் தமிழீழ விடுதலைப் போராட்டமும் அது கட்டியெழுப்பிய நடைமுறை அரசும் நிறுவியுள்ளன.


4. திரைப்படங்களை மதிப்பீட்டணியின் பார்வைக்கு வழங்குவதற்கான விதிமுறைகள்

4.1 ஈழத் திரைப்படம் எனக் கருதப்படும் படம் ஒன்றின் தயாரிப்பாளர், தான் தயாரித்த படத்தை தனது தயாரிப்பிற்கான ஆதாரத்துடன் மதிப்பீட்டுக்காகச் சமர்ப்பிக்கலாம். திரையிட இருக்கும் பிரதியின் இலச்சினை (watermark) இட்ட முழுவடிவத்தை இணைய மூலமாக பார்வையிடுவதற்குரிய வழிமுறையுடன் ஈழத்திரை இணையம் ஊடாக விண்ணப்பிக்கவேண்டும்.

4.2 மதிப்பீட்டணிக்குள் மேற்கொள்ளப்படும் அனைத்து முடிவுகளும், கலந்துரையாடல்களும் எழுத்துவடிவில் பேணப்படும். ஒரு படத்தை மதிப்பீடு செய்த பின்னர் ஒவ்வொரு மதிப்பீட்டு குழு உறுப்பினரும் மேற்கொண்ட முடிவுகள் எழுத்தாதாரத்துடனும் வெளிப்படைத்தன்மையுடனும் தயாரிப்பாளருக்கு வழங்கப்படும். பங்குபெற்ற மதிப்பீட்டுக் குழுவின் உறுப்பினர் விபரம் பொதுவாகவும், அவர்கள் ஒவ்வொருவரும் மேற்கொண்ட மதிப்பீடுகள் பெயர் சுட்டாமலும் வெளிப்படைத் தன்மையோடு தயாரிப்பாளருக்கு வழங்கப்படும். அனைத்து பதிவுகளும் மீள் சென்று பார்க்கக்கூடிய வகையில் இணையத்தில் ஆவணப்படுத்தப் பட்டிருக்கும்.


5. மதிப்பீட்டணியின் செயற்பாட்டு விதிமுறைகள்

5.1 மதிப்பீட்டிற்கான திரைப்படம் ஈழத்திரை இணையத்திற்கு கிடைத்ததும், அனைத்து மதிப்பீட்டணி உறுப்பினர்களுக்கும் (ஆகக்கூடியது ஒன்பது பேர்) மின் அஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி ஊடாக ஒரே நேரத்தில் அறிவித்தல் வழங்கப்படும்.

5.2 தகவல் தெரிவிக்கப்பட்டு இருபத்து நான்கு (24) மணி நேரத்திற்குள் மதிப்பீட்டுக்கான அழைப்பை உறுப்பினர்கள் ஏற்க அல்லது நிராகரிக்க வேண்டும். ஏற்கும்போது ஒவ்வொரு திரைப்படத்திற்கும் பிரத்தியேக வெளிப்படுத்தாமை உடன்படிக்கையில் (NDA: non-disclosure agreement) கையொப்பமிட்டு குறித்த திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு அனுப்பிவைக்கப்படும்.

5.3 தயாரிப்பாளர் ஈழத்திரை இணையம் ஊடாக அனைத்து மதிப்பீட்டணி உறுப்பினர்களுக்கும் இலச்சினை (watermark) இட்ட திரைப்படத்தைப் பார்ப்பதற்கான முகவரியை மின் அஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி ஊடாக ஒரே நேரத்தில் அனுப்பி வைப்பார்.

5.4 திரைப்படம் கிடைத்து இருபத்து நான்கு (24) மணி நேரத்தினுள் அதனைப் பார்வையிட்டு அதற்கான மதிப்பெண்களை இட வேண்டும்.

5.5 அழைப்பை ஏற்றும் திரைப்படத்தைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் பார்க்க முடியாதவர்கள் மதிப்பெண்களை வழங்க முடியாது.

5.6 ஒரு திரைப்படத்திற்கு குறைந்தது ஐவரும், அதிகமாக ஒன்பது உறுப்பினர்களும் வாக்களித்திருக்க வேண்டும். அறுவர் அல்லது எண்மர் பங்களித்திருக்க முடியாது. ஒன்பது உறுப்பினர்கள் பங்கேற்காத தருணத்தில் எட்டாவதாக அழைப்பை ஏற்ற உறுப்பினர் வாக்களிக்கும் உரிமையை இழப்பார். திரைப்படம் பார்த்து மதிப்பீடளிக்க அழைப்பை ஏற்றவர்களின் எண்ணிக்கை இரட்டைத் தானத்தில் இருந்தால் இறுதியாக அழைப்பை ஏற்ற உறுப்பினருடைய பங்கேற்பு செல்லுபடியாகாததாகக் கருதப்படும்.

5.7 மதிப்பீட்டணி உறுப்பினர் ஒவ்வொருவரும் திரைப்படத்தைப் பார்த்து முடித்து 30 நிமிடங்களுக்குள் மதிப்பீட்டுக்கான தேர்வுகளை பிற உறுப்பினர்களுடன் உரையாடாமல் சுயமாக இணையம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

5.8 தொடர்ச்சியாக மூன்று திரைப்பட மதிப்பீடுகளில் கலந்து கொள்ளாதவர்கள் அணியில் தொடர்ந்து பங்கேற்கும் வாய்ப்பை இழந்துவிடுவார்கள்.

5.9 மதிப்பீட்டணி உறுப்பினர்கள் யாரேனும் மதிப்பீட்டுக்குரிய திரைப்படத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, கலைரீதியாகவோ அல்லது தயாரிப்புரீதியாகவோ தொடர்புற்றிருந்தால் குறித்த திரைப்பட மதிப்பீட்டில் இருந்து விலகி இருத்தல் வேண்டும்.

5.10 அனைத்து மதிப்பீட்டு உறுப்பினர்களும் தமது மதிப்பீட்டின் முடிவில் திரைப்படத்திற்கு அதிக படியாக நான்கு சொற்கள் கொண்ட முழக்கம் (slogan) ஒன்றைச் சமர்ப்பிக்கவேண்டும்.

5.11 அனைத்து மதிப்பீட்டணி உறுப்பினர்களதும் வாக்களிப்பு முடிவடைந்ததும் முழக்கங்கள் அகர வரிசையில் காண்பிக்கப்படும், மதிப்பீட்டில் பங்கேற்ற உறுப்பினர்கள் அனைவரும் தாங்கள் வழங்கிய முழக்கத்தைத் தவிர்த்து, பிறரின் முழக்கத்தில் ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டும் (வாக்களிப்பின் போது முழக்கங்கள் இட்டவர்களின் பெயர்கள் காண்பிக்கப்பட மாட்டாது). அதிக வாக்குகள் பெறும் முழக்கம் அத் திரைப்படத்திற்குரிய முழக்கமாகக் கொள்ளப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட முழக்கங்களிற்கு சமமான வாக்குகள் கிடைக்கும் தருணத்தில், மீள் வாக்கெடுப்புகள் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு அதிக பெரும்பான்மை பெறும் ஒரு முழக்கம் இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்படும்.

5.12 பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களின் வாக்குகளும் சமமாக மதிக்கப்பட்டுக் கூட்டப்பட்டு, மொத்தம் வாக்களித்த உறுப்பினர்களின் எண்ணிக்கையால் பிரிக்கப்பட்டு இறுதிக் கணிப்பு அறிவிக்கப்படும். இந்தப் பொறிமுறை தானியக்கமான இணைய மென்பொருள் ஊடாக நடைபெறும். எந்த ஓர் அணி உறுப்பினரதோ அல்லது ஈழத்திரையினதோ தனிப்பட்ட தெரிவுகள் தீர்ப்பின் மீது தாக்கம் செலுத்தாத வகையில் இந்தத் தானியங்கிப் பொறிமுறை வெளிப்படைத்தன்மையோடு அணி உறுப்பினர்களால் சரிபார்த்துக்கொள்ளும் வகையில் அமைந்திருக்கும்.

5.13 உறுப்பினர்கள் தமது மதிப்பீட்டணிப் பங்குபெறலை குடும்ப உறுப்பினர்களுக்கோ நண்பர்களுக்கோ பங்கேற்றும் காலத்தில் தெரிவிக்காதிருப்பது நல்லது.

5.14 தயாரிப்பாளர்களும் மதிப்பீட்டணி உறுப்பினர்கள் பற்றிய விபரங்களை பொது வெளியில் தெரிவிக்காதிருப்பது நல்லது.

5.15 மதிப்பீட்டணி உறுப்பினர்கள் எந்த ஒரு தருணத்திலும் திரைப்படம் வெளிவரும் முன் திரைப்படம் சார்ந்த தமது “எதிர்மறை” கருத்தையோ அல்லது விமர்சனத்தையோ பொதுவெளியில் இடுகை செய்தல் ஆகாது. இது இரகசியம் காப்புக்கு அவசியமாகும்.

5.16 மதிப்பீட்டணி உறுப்பினர்கள் தாம் திரைப்படத்துக்கு வழங்கிய மதிப்பெண்கள் பற்றியோ, திரைப்படம் சார்ந்த தெரிவுக்குழு விவாதங்கள் ஏதும் இடம்பெற்றிருந்தால் அவை பற்றியோ ஒருபோதும் பொது வெளியில் தகவல்களைப் பகிரக்கூடாது.


6 மதிப்பீட்டின் இரண்டு சுற்றுக்களும் இருபத்தி ஆறு பரிமாணங்களும்

6.1 முதலாம் சுற்று: பின்வரும் கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்று ஒவ்வொரு உறுப்பினரும் பதில் அளித்தாகவேண்டும்.

“இத்திரைப்படம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈழத்திரை மதிப்பீட்டணி பேணவேண்டிய விழுமியங்களை இழிவு படுத்துவதாக நீங்கள் கருதுகிறீர்களா?”

மேற்குறித்த வினாவிற்கு அரைவாசிக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் "ஆம்" எனப் பதிலளித்திருந்தால் குறித்த திரைப்படம் ஈழத்திரை மதிப்பீட்டணியின் பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளாது. குறித்த முடிவு தயாரிப்பாளருக்கு மட்டும் அறியத்தரப்படும். பொது வெளியில் முன்வைக்கப்படமாட்டாது.

6.2 இரண்டாம் சுற்று: பின்வரும் பரிமாணங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக மதிப்பீட்டெண்களை வழங்கவேண்டும்.
1 (குறைவு) - 10 (கூடுதல்) மதிப்பெண்கள்.

6.2.1 மூலத்தன்மை (Originality)

6.2.2 புத்தாக்கம் (Creativity)

6.2.3 கதைக்கரு (Theme)

6.2.4 கதை (Story)

6.2.5 கதை வசனம் (Dialogue)

6.2.6 திரைக்கதை (Screenplay)

6.2.7 பாடல் வரிகள் (Lyrics)

6.2.8 நெறியாள்கை (Direction)

6.2.9 நடிகர்கள் தேர்வு (Casting)

6.2.10 நடிப்பு (Acting)

6.2.11 ஒப்பனை (Makeup)

6.2.12 கதாபாத்திர வடிவமைப்பு (Character design)

6.2.13 ஒளிப்பதிவு (Cinematography)

6.2.14 படத்தொகுப்பு (Editing)

6.2.15 ஒலிப்பதிவு (Sound recording)

6.2.16 ஒலி வடிவமைப்பு (Sound design)

6.2.17 இசையமைப்பு (Music composition)

6.2.18 ஆடை வடிவமைப்பு (Costume design)

6.2.19 கலை அமைப்பு மற்றும் இடம் (Art Direction and Location)

6.2.20 நுண்கலை (Fine Arts)

6.2.21 சண்டைக்காட்சி (Stunt)

6.2.22 கணினி வரைகலை (Visual effects)

6.2.23 தயாரிப்பு வடிவமைப்பு (Production design)

6.2.24 பார்வையாளரை உள்ளீக்கும் திறன் (Entertainment Value)

6.2.25 கருப்பொருளைக் கடத்தும் திறன் (Message Effectiveness)

6.2.26 சமூகத் தாக்கம் (Social impact / Call to Action)


7 மதிப்பீட்டின் பெறுபேறுகளை தயாரிப்பாளரிடம் கையளிப்பதற்கும் பெதுவெளியில் முன்வைப்பதற்குமான விதிமுறைகள்

7.1 தயாரிப்பு நிறுவனத்திற்கு ஈழத்திரை முத்திரையுடன் கூடிய மதிப்பீடு மற்றும் முழக்கம் திசையன் (vector) வடிவில் அனுப்பி வைக்கப்படும். அதற்கான மாதிரி வருமாறு:

Eelamcinema review

7.2 ஈழத்திரை மதிப்பீட்டணியின் பெறுபேறுகளைத் தயாரிப்பு நிறுவனம் ஒரு கிழமைக்குள் (168 மணித்தியாலங்கள்) நிராகரிக்காதவிடத்து அம் முடிவு தயாரிப்பு நிறுவனத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும். மாறாக ஈழத்திரை மதிப்பீட்டணியின் முடிவை ஏற்றுக்கொள்ளாதவிடத்து, ஈழத்திரையின் மதிப்பீட்டு முடிவை தயாரிப்பு நிறுவனம் எங்கும் பயன்படுத்த முடியாது. குறித்த திரைப்படம் மீண்டும் மதிப்பீட்டிற்கு ஏற்றுக்கொள்ளப்படவும் மாட்டாது.


8 மதிப்பீட்டணியின் விதிமுறைகளில் மாற்றம் மேற்கொள்ளல்

8.1 மதிப்பீட்டணியின் விதிமுறைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின், அவை முற்கூட்டியே எழுத்து மூலமாக முன்மொழியப் பட்டிருக்க வேண்டும்.

8.2 ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்ற விதிமுறை ஒன்றை மாற்றுவதாயின், அதற்கான இலக்கத்தைக் குறிப்பிட்டு புதிய முன்மொழிவை மேற்கொள்ள வேண்டும்.

8.3 புதிய விதிமுறை ஒன்றைச் சேர்ப்பதாயின் அதற்குப் பொருத்தமான புதிய இலக்கத்தை இட்டு முன்மொழிவைச் சமர்ப்பிக்க வேண்டும்.

8.4 முன்மொழிவின் உள்ளடக்கத்தோடு அதைப் பிரேரிப்பவரின் முழுமையான பெயரும் குறிப்பிடப்பட்டு எழுத்து மூலமாக review(அற்)eelamcinema.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு சனவரி முதலாம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

8.5 மாற்றப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு, பதிப்பிலக்கம், திகதி இடப்பட்ட விதிமுறைகளின் நடப்பு வடிவம் பெப்ரவரி மாதம் இரண்டாம் கிழமை முடிவதற்குள் eelamcinema.com/review.html எனும் இணைய முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

8.6 மதிப்பீட்டணியின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் ஈழத்திரை இணைய ஆசிரிய பீடத்தின் அங்கீகாரமும் ஒருசேரப் பெறும்போதே விதிமுறைகளில் மாற்றங்கள் இயற்றப்படும்.

8.7 சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்படாதவிடத்து அதை நிராகரிப்பவர்கள் முன்வைத்த காரணங்கள் குறித்த இணையத்தளத்தில் பகிரங்கப் படுத்தப்படல் வேண்டும்.


9 இலாப நோக்கற்ற அறிமுகத்திரையிடல்

ஈழத்திரை மதிப்பீட்டணியால் நான்குக்கு மேல் மதிப்பெண்களைப் பெறும் திரைப்படங்களை ஈழத்தமிழர்கள் அதிகமாக வாழும் இருபது நாடுகளில் ஒரே நேரத்தில் அறிமுகத் திரையிட ஈழத்திரை இணையம் தன்னால் இயன்ற அளவு முயற்சி மேற்கொள்ளவது நல்லது.


10 நடப்பு விதிமுறைகளின் பதிப்பெண்

பதிப்பெண்: 1.4
திருத்தப்பட்ட காலம்: 2019 டிசம்பர் 12

இவ்வண்ணம்,
ஈழத்திரை இணையம்