x


x

Beta Version
வெள்ளோட்டம்

ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.

"ஜனவரி 29" முத்துக்குமார் மூட்டிய தீ

29 Aug 2010

ஈழத்தில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்தக்கோரி உயிரை ஆயுதமாக்கி தன்னை ஆகுதியாக்கிய முத்துக்குமாரனின் வாழ்வைச் சித்தரிக்கும் 'ஜனவரி‌ 29' எனும் ஆவணப்படம் கடந்த 28.08.2010 அன்று சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது.
சிங்கள இனவாத அரசால் மேற்க்கொள்ளப்பட்ட கொடிய யுத்தத்தால் வன்னிப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இதனை விடவும் உணவுப்பொருட்கள் இன்மையால் பட்டினிச்சாவையும் பல நூற்றுக்கணக்கானவர்கள் சம்பவித்தனர்.

இடைவிடாத பயங்கர யுத்தால் தமிழ் மக்கள் கொல்லப்படுகிறார்கள். இதனை ஏனைய நாடுகள் எவையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இந்த நிலை மிகவும் கொடுமையானது. இந்திய அரசு குறிப்பாக தமிழக அரசு அங்கு மக்கள் கொல்லப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்தி மக்களின் பிரச்சினைகளிற்கு தீர்வுகான உடனடியாகத் தலையிட வேண்டும். என்பதை வலியுறுத்தி 2009 ஜனவரி 29 அன்று தனக்குத்தானே தீ யிட்டு தனது உயிரை வன்னி மக்களின் விடிவிற்காக ஆயுதமாக்கி தியாகியானார்.

இந்த நிலையில் தியாகி முத்துக்குமரனின் வாழ்வையும் வரலாற்றையும் எடுத்துக்கூறும் ஆவணப்படம் ‘ஜனவரி 29’ கடந்த 28.08.2010 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது. சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள ‘பிலிம்ஸ் சேம்பரில்’ நடைபெற்ற நிகழ்வில் குறுந்தகடை தென்னிந்திய திரைப்பட நடிகர் திரு. சத்தியராஜ், இயக்குனர் அமீர் ஆகிய இருவரும் இணைந்து வெளியிட தியாகி முத்துக்குமரனின் தந்தையாரும் ரோட்டரி தலைவர் ஒளிவாணன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

நிகழ்வின் தொடக்கமாக தியாகி முத்துக்குமாரனின் உருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அடுத்து நிகழ்வில் உரையாற்றிய இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் “ஈழத்தில் தமிழினம் கொன்று குவிக்கப்பட்டபோது தமிழகத்தில் குமுறி எழுந்த முத்துக்குமாரன் தன்னை தீயில் உருக்கினான். அவன் மூட்டிய தீ தமிழக இளைஞர்களை மட்டு மல்லாது உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அனைத்துத்தமிழ் இளைஞர்களையும் துடித்தெழுந்து போராடவைத்தது. முத்துக்குமார் மூட்டிய தீயின் வலிமை அத்தனை சக்த்வாய்ந்தது” என்றார்.

ஜனவரி 29 ஆவணப்படத்தை வெளியிட்டுவைத்து உரையாற்றிய இயக்குனர் அமீன் அவர்கள் “ஒவ்வொரு தமிழர்களும் தங்களது அறிவை இலங்கையில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் விடுதலைக்காக உழைக்கவேண்டும். இதற்காக நாங்கள் அனைவரும் அறிவு சார்்த துறைகளில் எங்களை மேன்மைப்படுத்தி அந்த மக்களின் உணர்வுகளைகாக்க வேண்டும். இதுவே நாங்கள் முத்துக்குமார் போன்ற தியாகிகளிற்கு அற்பணிக்கும் காணிக்கை” என்றார்.

திரைப்பட நடிகர் திரு.தமிழர் சத்தியராஜ் “குறுந்தகடைப் பார்க்கும் பொழுதுதான் எத்தனை திறமைகள் முத்துக்குமாரிடம் இருந்தது என்பது தெரிகிறது. இத்தனை திறமைகளுடன் வாழ்ந்த முத்து தன்னை இனத்தின் மானத்திற்காக அற்பணித்திருக்கிறான் என்றால் வரலாற்றில் உயர்ந்த தியாகம். இவனது வரலாற்றை இந்துக்கள் பகவத் கீதை பக்கத்திலும், கிறிஸ்தவர்கள் பைபிள் பக்கத்திலும், முசுலீம்கள் குரான் பக்கத்திலும் வைக்கவேண்டும். முத்துக்குமரனின் தியாகம் ஒவ்வொருவரும் கடவுளின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நிகரானது.” என தனது உரையில் மிகவும் தத்துருவமாக எடுத்துக் கூறினார்.

ஜனவரி 29 குறும்படத்தை வழக்கறிஞர் நல்லதுரை அவர்கள் தயாரிப்பில் பிரகதீசுவரன் இயக்கியிருந்தார். இதற்கான ஆலோசனைகளை நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து அறிவுறுத்திவந்தார். சுமார் 70 நிமிடங்கள் ஓடும் இந்தக் குறும்படம் உயர்தரமான ஒலி,ஓளி அமைப்போடு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட பெட்டியில், முத்துக்குமரனின் கடைசிக்கடிதம் அவருடன் எரிந்துபோன காகிதம் போல வடிவமைக்கப்பட்டிருந்தது. படம் திரையிடப்பட்ட 70 நிமிடங்களும் அரங்கில் மரண அமைதி நிலவியதுடன் அனைவரும் கண்ணீர்விட்டனர்.

‘ஜனவரி 29’ ஆவணப்பட வெளியீட்டிற்கான அரங்க அனுமதியைப் பெறுவதில் பல்வேறு நெருக்கடிகள் எதிக்கொள்ளப்பட்டதாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார்.