x


x

Beta Version
வெள்ளோட்டம்

ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.

ஈழத்துத் திரைப்படத்துறையின் வரலாறு - பாகம் 1

12 Aug 2010

பரந்து விரிந்திருக்கும் உலகப் பந்தில் சினிமா கலைகளின் சிகரத்தைத் தொட்டு நிற்கிறது. கலைகளின் உதய சூரியனான சினிமா மிகவும் முக்கியத்துவமான ஊடகமாகும். உயிரோட்டமான ஊடகத்திறன் மிக்க சினிமா உலக நாகரிங்களின் வளற்சியின் அறுவடையாகும். இன்று சினிமா கண்டங்களிற்குக் கண்டமும், நாடுகளிற்கு நாடும், இனங்களிற்கு இனங்களும் மாறுபட்டு தமக்கே உரித்தான தனித்துவங்களுடன் பிரகாசிக்கிறது. இந்த நிலையில் தமிழ்ச்சினிமா இந்தியா,மலேசியா,ஈழம் ஆகிய மூன்று நாடுகளில் பிரசவிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. 1916 ஆம் ஆண்டு இந்தியாவில் தமிழ்ச் சினிமா உதயமாகியது. இன்று 94 ஆண்டுகளைக் கடந்து நுற்றாண்டை எட்டிக்கொண்டிருக்கிறது.
சினிமாத்துறையின் தொழில் நுட்பங்களையும் கலைத்துவங்களையும் பெற்று விழங்கும் இந்தியச் சினிமா யதார்த்தவாதமானதாக இல்லாதமை கவலையாது. அரசுகளின் பேராதரவுடன் இந்தியச் சினிமா இயங்குகிறது. இதனைப்போல மலேசியச் சினிமாவும் அரசுகளின் ஆதரவுடன் இயங்குகிறது. இந்த இடத்தில் ஈழத்துச் சினிமா எங்கிருக்கிறது என்பதை நோக்கவேண்டும்.

Sarmilaavin Ithaya Raakam
Sarmilaavin Ithaya Raakam
இலங்கைத்தீவின் இரண்டாம்தர குடிமக்களாக தமிழர்கள் இருந்ததால் அழிக்கப்படும் தமது கலாச்சார விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையில் திரைப்படங்களை உருவாக்க வேண்டியதாயிருந்தது. ஆனாலும் அவர்கள் பெரும்பாண்மை மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் சிங்கள ஆட்சியாளர்களின் இன ஒடுக்குமுறைகள் காரணமாக முழுமையான வேகத்துடன் ஈழத்துச் சினிமாவை முன்னெடுக்க முடியவில்லை.
ஈழத்திற்கென தனியான தாயகம் இல்லாத நிலையில் ஈழத்தின் சினிமா மிகவும் பரிதாபமான கட்டத்தில் இருக்கிறது என்ற உண்மை சினிமா ஆர்வலர்கள் அனைவரும் அறிந்த உண்மை.

காலத்துக்குக் காலம் பல்வேறு ஆக்கிரமிப்புக்களை உடைத்தெறிய வேண்டியவர்களாக ஈழத்துச் சினிமா இருந்தது. ஆரம்பத்தில் தென்னிந்தியச் சினிமாவின் ஆதிக்கத்தில் இருந்து ஈழத்துச் சினிமாவை திசை திருப்பவேண்டிய கட்டம். ஈழத் தமிழ்மக்களிடம் ஈழத்து கலாச்சார விழுமியங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் திரைப்படங்களை உருவாக்கும் பண பலம் இருக்கவில்லை. இதனால் அவர்களால் தனித்து திரைப்படங்களை உருவாக்க முடியவில்லை. ஈழத்தில் வாழ்ந்து வந்த பண வல்லமை படைத்தவர்கள் தென்னிந்தியச் சினிமாவின் இலங்கை முகவர்களாக செயற்பட்டு வந்தனர்.

இரண்டாவதாக ஈழத்தில் வாழ்ந்த மக்கள் தென்னிந்தியச் சினிமாவை தங்களது சினிமா என்ற என்னத்துடன் செயற்பட்டனர். இவை ஈழத்தில் சினிமா உருப்பெறுவதற்குத் தடையாக அமைந்த பிரதான காரணங்களாக அமைந்தன. இதிலிருந்து வெளிவந்து ஈழத்தில் சினிமாவிற்கு உயிரூட்டவேண்டும் என்ற துடிப்புடன் 1950 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சினிமா மற்றும் நாடகத்துறைகளில் ஆர்வம் நிறைந்த வடக்கு – கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பகுதிகளைச்சேர்ந்த ஆர்வலர்கள் மலையகத்தின் ‘கொஸ்லந்த’ என்ற இடத்தில் ஒன்று கூடி ஈழச்சினிமாவின் உதயத்திற்கு வளிசமைத்தார்கள்.

Founders of the organization “Cinema Kalanilayam
Founders of the organization “Cinema Kalanilayam"
இவர்களில் வி.தங்கவேலு, எம்.வி.ராமன், ஏ.அருணன், ஹென்றி சந்திரவன்ச ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்களின் கூட்டுமுயற்சியால் ‘சினிமா கலாநிலையம்’ என்ற பெயரில் ஒரு மன்றமும் உருவாகியது.
‘சினிமா கலா நிலையத்தின்’ ஊடாக முதலாவது தமிழ்ப்படமான ‘சமுதாயம்’ திரைப்படம் உருவாக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. பின்னாளில் சமுதாயம் கலைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் 1962 ஆம் ஆண்டு 16 மில்லி மீட்டர் குறும்படமாக ஈழத்துச் சினிமாவின் முதல்படமான ‘சமுதாயம்’ வெளியானது.இப் படத்தை இயக்கியவர் சிங்கள இனத்தவரான கென்றி சந்திரவன்ச என்பவராவார். முதலாவது 35 மி. மீட்டர் முழு நீழத்திரைப்படமாக ஶ்ரீ கணபதி பிக்சர்ஸ் தயாரித்த "தோட்டக்காறி" வெளியானது.

இதனைப்போல 1956 ஆம் ஆண்டு வெளியான முதலாவது சிங்களத்திரைப்படமான “கடவுனுபொறந்துவா” ‘உடைந்தமொழிகள்’ திரைப்படத்தை இயக்கியவர் எம்.எஸ்.நாயகம் என்ற தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

S M Naayakam
S M Naayakam
Henri Santhiravansa
Henri Santhiravansa
1950 ஆம் ஆண்டு ‘சமுதாயம்’ முதல் 1993 ஆம் ஆண்டு வெளியான ‘சர்மிளாவின் இதயராகம்’ வரையான 43 ஆண்டுகளில் 02 தமிழ்க் குறும்படங்களையும், 26 முழு நீளத் திரைப்படங்களையும், 05 இலங்கை இந்திய கலைஞர்கள் இணைந்து தயாரித்த முழு நீளத் திரைப்படங்களையும், 08 சிங்களத்தில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்களும், படத் தயாரிப்பு முயற்சிகள் முழுமைபெறாது இடையில் நின்றுபோன படங்கள் 07 உட்பட மொத்தம் 48 திரைப்படங்கள் தயாரிப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்றுள்ளன.
இவற்றில் 28 ஈழத்தில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களாகும். பல்வேறு நெருக்கடிகளிற்கும் சவால்களுக்கும் எதிர் நீச்சல் போட்டு உருவாக்கிய ஈழத்துத் திரைப்படங்களில் பெரும்பாலன படங்களில் ஒரு பிரதி கூட பாதுகாக்க முடியாத நிலையில் அழிவடைந்து விட்டன. இந்த இடத்தில் ஈழத்துச் சினிமாவின் வழற்சிப்பாதையை முற்றிலும் தகர்த்த சம்பவத்தை நிச்சயம் பதிவாக்கவேண்டியுள்ளது.

Thooddakkaari
Thooddakkaari
1956 ஆம் ஆண்டு தமிழ்மக்களின் அரசியல் உரிமைப் போராட்டங்கள் முனைப்புப்பெறத் துவங்கியநேரம். சிங்கள ஏகாதிபத்தியம் தமிழ் மக்களின் கல்வி, கலாச்சாரம், பொருளாதாரம் அனைத்தையும் முடக்கும் வகையில் செயலாற்றத் தொடங்கயது. இலங்கையில் தனிச்சிங்களச் சட்டமும் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்க சிங்களச் சினிமாவை முன்னிலைப்படுத்தும் நோக்கில் தமிழ்மொழிப்படங்கள் மீது தடைகளைப் பிறப்பித்தார் என்பதுடன் சிங்களத் திரைப்படங்களை அனைத்துத் திரையரங்குகளிலும் கட்டாயம் திரையிட வேண்டும் என்ற கட்டாயத்தையும் பிறப்பித்து சிங்களச் சினிமாவின் உயர்ச்சிக்கு வழிசமைத்தார்.

1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் ஆயுத வடிவம்பெற்றது. இதன் பின்னர் தமிழ் மற்றும் முஸ்லீம் கலைஞர்கள் சிங்களக் கலைஞர்களால் ஒதுக்கப்பட்டனர்.

1972 ஆம் ஆண்டு இலங்கையில் திரைப்படக் கழகம் உருவாக்கப்பட்டது. 1983 ஆண்டு கே.குணரத்தினம் அவர்களால் கொழும்பில் நடத்தப்பட்ட திரைப்படக் களமான விஜயா ஸ்ரூடியோ சிங்களவர்களால் கொழும்பில் நடத்தப்பட்ட தமிழ் இனக் கலவரத்தில் அழிக்கப்பட்டது. தமிழ் மக்களின் திரைப்பட ஆதாரங்கள் அனைத்தும் தீயிட்டுக்கொழுத்தப்பட்டன.

Samuthaayam
Samuthaayam
‘மாமியார் வீடு’ திரைப்படத் தயாரிப்பிற்காக இந்தியாவில் இருந்து நடிகர்களை அழைத்திருந்த பிரபல தமிழ் இயக்குநர் கே.வெங்கட் வெட்டிக்கொல்லப்பட்டார். இவர் ‘மகா அம்மே’ மற்றும் ‘சிலுக்கு சிறி’ உட்பட்ட மூன்று சிங்களப்படங்களை இயக்கியவர்.
1983 ஆம் ஆண்டு இலங்கைத்தீவில் வாழ்ந்த ஒட்டுமொத்த தமிழ் மக்களும் சிங்கள இனவெறி அரசால் தூண்டப்பட்ட யூலைக் கலவரத்தில் வெந்து போனார்கள். தமிழ்மக்களின் குருதி தென்பகுதிகள் எங்கும் ஆறாய் ஓடியது.

Kadamaiyin Ellai
Kadamaiyin Ellai
‘டக்சி டிரைவர்’ என்ற படத்தை இயக்கிய சேமசேகரன் அவர்களின் வீடும் தியிட்டு எரிக்கப்பட்டன. அவரிடம் இருந்த திரைப்படத்தின் ஒரே ஒரு பிரதியும் எரிக்கப்பட்டு விட்டது.
இந்தப் பயங்கரங்களின் பின்னர் ஈழ மக்கள் அடிமைப்படுத்தப்பட்டதைப்போல ஈழத்துச் சினிமாவும் அடிமைப்படுத்தப்பட்டு ஆழ்துயிலை நோக்கிச் சென்றது எனலாம்.

இத்தனை வன்முறைகளுடன் ஈழத்துச் சினிமாவின் முதல் கட்டம் ஈழத்தமிழ் மக்களைப்போலவே அமைதியாகிறது. இதனுடன் ஈழத்துச் சினிமாவின் முதல் காலம் முடிவடைகிறது.

இந்திய இலங்கைக் கூட்டுத்தயாரிப்பு - இரண்டாவது பாகம் தொடரும்...