ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.
85 வயதான பிரபல வங்காள நடிகர் சௌமித்ரா சாட்டர்ஜி (Soumitra Chatterjee) , கொவிட் -19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 40 நாட்கள் போராட்டத்திற்குப் பின்னர் இன்று காலமானார்.
கடந்த ஒக்டோபர் 6 ஆம் திகதி முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாட்டர்ஜி, கடந்த வாரங்களாக அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று உயிரிழந்துள்ளார். ஆஸ்கார் விருது பெற்ற இயக்குனர் சத்யஜித் ரேயின் (Satyajit Ray) 14 படங்களில் முன்னணி நடிகராக நடித்துள்ள சாட்டர்ஜி, ரேயின் (Ray) மூன்றாவது திரைப்படமான 1959 இல் வெளியான அபூர் சன்சார் (Apur Sansar) திரைப்படம் மூலமாக திரை உலகிற்கு அறிமுகமானார்.
ஆறு தசாப்த காலமாக பெங்காலி மொழித் திரையில் வலம்வந்த இவர், 300 இற்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளதுடன், ஒரு திறமையான நாடக ஆசிரியர், நாடக நடிகர் மற்றும் கவிஞராகவும் அறியப்படுகின்றார். இவ்வாறு பல்முகக் கலைஞராக அறியப்பட்ட பிரபல நடிகர் சௌமித்ரா சாட்டர்ஜியின் இழப்பு திரையுலகின் பேரிழப்பேயாகும்.