ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.
ரைடன் வி பாலசிங்கம் (Triden V Balasingam) இயக்கத்தில் வெளியான டோஸ்டர் (Toaster) என்ற 10 நிமிட குறும்படம், மேற்கத்திய இராணுவ நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மத்திய கிழக்கில் வசிக்கும் ஒரு முஸ்லீம் இளைஞன், தனக்குப் பாதிப்பை ஏற்படுத்தியவர்களை பழிவாங்க கனடாவுக்குச் செல்லும் கதைக்களத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
குறித்த டோஸ்டர் (Toaster) குறும்படம் டிசம்பர் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் 10 ஆவது புனே திரைப்பட விழாவின் போது வெள்ளித்திரையில் திரையிடப்படவுள்ளது.
இந்தியா, மகாராஷ்டிராவின் நவி பெத் புனே, எஸ் எம் ஜோஷி கலையரங்கத்திலேயே குறித்த திரையிடல் இடம்பெறவுள்ளது. இருப்பினும், கோவிட்-19 நிலை காரணமாக மாநில அரசு மற்றும் உள்ளூர் மாநகராட்சியின் பார்வையாளர்களுக்கு மட்டுமே திரைப்படத்தைப் பார்ப்பதற்கான அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதேநேரம், குறித்த டோஸ்டர் (Toaster) குறும்படமானது ரோம் இன்டிபென்டன்ட் பிரிஸ்மா விருதுகளிற்கும் அதிகாரப்பூர்வமாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வளங்களின் பற்றாக்குறைகளுக்கு மத்தியிலும், நேர்மையுடன் ஒரு படம் தயாரிக்கப்படும் போது அதற்கான அங்கீகாரம் கண்டிப்பாகக் கிடைக்கப்பெறும் என படப்பிடிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், 12-12-2020 முதல் அமேசான் பிரைமில் (Amazon Prime) இக்குறும்படத்தை அதிகாரபூர்வமாகப் பார்வையிட முடியுமெனவும் தெரிவித்துள்ளனர்.