ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.
ஈழத்துத் திரைப்படத் துறையின் முக்கிய அடையாளங்களில் ஒருவரான முதுபெரும் கலைஞன், திரைப்பட இயக்குனர், எழுத்தாளர், நடிகர் எனப் பன்முக ஆளுமை கொண்ட திரு. கேசவராஜன் நவரத்தினம் அவர்கள் 09.01.2021 அன்று காலமானார்.
1986ம் ஆண்டு இவர் எழுதி இயக்கிய முதலாவது திரைப்படமாகிய 'தாயகமே தாகம்' தொடக்கம் 2018 இல் வெளிவந்த இவரது இறுதித் திரைப்படமாகிய 'பனைமரக்காடு' வரை இவர் இயக்கிய அனைத்துத் திரைப்படங்களும் எமது மண்ணும் மண் சார்ந்ததுமான ஈழம் சினிமாவாக இருந்துள்ளமையானது இவரின் தனிப்பெரும் அடையாளமாகும்.
இவரது 'தாயகமே தாகம்', 'மரணம் வாழ்வின் முடிவல்ல' போன்ற படங்களுக்காக தேசிய தலைவரின் பாராட்டை பெற்றதுடன் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் நிதர்சனம் பிரிவுடன் இணைந்து தனது சினிமா பயணத்தைத் தொடர்ந்தார். பல வீதி நாடகங்கள், மேடை நாடகங்களை தயாரித்து வழங்கிய இவர் பிஞ்சுமனம், திசைகள் வெளிக்கும், அம்மா நலமா போன்ற திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.
அத்துடன் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் வலியை உணர்த்தும் 'அப்பா வருவார்' போன்ற குறும்படங்களை இயக்கியும் நடித்தும் உள்ளார்.
இந்திய சினிமாக்களின் வருகை ஈழத்தில் அதிகரித்திருந்த காலப்பகுதிகளில் அந்தப் படங்களுக்கு இணையாக அல்லது அவற்றை விடவுமதிகம் திரையிடப்பட்ட ஈழத்துத் திரைப்படங்களில் இவரது பங்கும் அதிகம்.
இவ்வாறான முதுபெரும் ஆளுமைகள் மட்டுமின்றி நினைவுகள் அழிந்தும், அழிக்கப்பட்டும் வரும் இத்தருணத்தில், மறைந்த மண்ணின் கலைஞன் திரு.கேசவராஜன் நவரத்தினம் போன்றவர்களின் வழியில் எமது ஈழத்துத் திரைத்துறையை வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு தற்கால இளைஞர்களின் கைகளில் தான் தங்கியிருக்கின்றது.