x


x

Beta Version
வெள்ளோட்டம்

ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.

பரதன் இராஜநாயகம் மாரடைப்பு காரணமாக 18.03.2021 அன்று லண்டனில் உயிரிழந்துள்ளார்.

24 Mar 2021

ஈழத்தின் சிறந்த ஒளிப்பதிவாளாரும், ஈழவிடுதலைப் போராட்டத்தின் முன்னணிப் போராளியுமான பரதன் இராஜநாயகம் மாரடைப்பு காரணமாக 18.03.2021 அன்று லண்டனில் உயிரிழந்துள்ளார்.

1980 காலப்பகுதியில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பிற்கான ஆவணப்படுத்தல், ஒளிப்படம் (Photography), தொலைக்காட்சி, வானொலி, ஒலிப்பதிவுக் கூடம், இசைப்பாடல்கள் வெளியீடு, மற்றும் திரைப்படத் தயாரிப்பு எனப் பலதுறைகளிலும் தடம்பதித்தவர் பரதன். 1986 இல் விடுதலைப் புலிகள் அமைப்பினர் “தரிசனம்” என்ற பெயரில் பரீட்சார்த்த தொலைக்காட்சி ஒளி பரப்பு முயற்சியொன்றை யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டபோது, அதனை முன்னின்று செயற்படுத்தியவர் பரதனே.
இதைத்தவிர, மக்களின் வாழ்க்கை, இராணுவ ஒடுக்குமுறை போன்றவற்றை அந்த நாட்களில் வீடியோ ஒளிப்பதிவு மூலம் பதிவு செய்வதிலும் தமிழகத்திற்கு அவற்றை அனுப்புவதிலும் பரதனுடைய பணிகள் அதிகமாக இருந்தன.

இந்திய அமைதிப்படையின் வருகையோடு தரிசனத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டன. பின்னர் இந்திய அமைதிப்படை வெளியேறியதைத் தொடர்ந்து 1990 இல் தரிசனம் என்ற ஒளிபரப்புச் சேவையை நவீன வசதிகளோடு “நிதர்சனம்” என்ற பெயரில் ஆரம்பித்தார் பரதன். அதனோடு இணைந்ததாக புலிகளின் குரல் என்ற வானொலிச் சேவையையும் ஆரம்பித்து இரண்டுக்குமான பொறுப்பாளராகவும் செயற்பட்டார். அத்துடன் புகைப்படப் பிரிவும் பரதனின் கீழேயே இயங்கியது.
ஒளிப்பதிவுத் துறையில் அறிவும் ஆர்வமும் கொண்ட சிறந்த ஒளிப்பதிவாளர் பரதன் பல போராளிகளை அந்தத் துறையில் உருவாக்கியதுடன், சமநேரத்தில் குறும்பட உருவாக்கத்திலும் ஈடுபட்டார். 1991 இல் அவர் 19 நிமிடங்களைக் கொண்ட “இனி” என்ற படத்தை உருவாக்கியதுடன், முழுநீளத் திரைப்படங்களையும் உருவாக்கினார்.
புரட்சிப்பாடல்களை உருவாக்குவதிலும் பரதனின் பங்கு அதிகம். கவிஞர் புதுவை இரத்தினதுரை, கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோருடைய பாடல்களை தென்னிந்தியப் பிரபல பாடகர்களைக் கொண்டு பாடுவித்து களத்தில் கேட்கும் கானங்கள் என்ற இசைப்பாடல் ஒலிப்பேழையாக வெளியிட்டவர்.

பின்பு தாயகத்தில் இசைப்பாடல்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் “தர்மேந்திரா கலையகம்” என்ற ஒலிப்பதிவுக் கூடத்தினை உருவாக்கி, அதிலிருந்து பல இசைப் பதிவுகளை மேற்கொண்டவர். 2000ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பை விட்டு நீங்கிய பரதன் லண்டனில் குடியேறினார். அங்கே “மூன்றாவது கண்” என்ற ஒளிக்கலையாக்க முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.

இவ்வாறு பன்முகத்திறமைகளையும் கொண்ட ஆளுமையாகத் திகழ்ந்த ஈழத்தின் கலைஞன் பரதன் 18.03.2021 அன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளமையானது ஈழத்தின் கலைவளர்ச்சியில் பேரிழப்பேயாகும்.