ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.
தன் குரல் மூலம் வானொலி நேயர்களின் இதயங்களை தம் வசப்படுத்திய பன்முக ஆளுமை இன்று விடைப்பெற்றுக்கொண்டது.
மூத்த வானொலி அறிவிப்பாளரும்,செய்தி வாசிப்பாளரும், எழுத்தாளரும்,நாடகக்கலைஞரும், நடிகருமான ஜோக்கிம் பெர்னாண்டோ அவர்கள் இன்று தனது 81வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
கொழும்பு கொட்டாஞ்சேனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜோக்கிம் பெர்னாண்டோ அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை கொட்டாஞ்சேனை சாந்த பெனடிக்ற் கல்லூரியில் கற்றதுடன், அங்கு ஆசிரியராகவும் சிறந்த நாடகக் கலைஞராகவும் இருந்த ராம் சுந்தரலிங்கம் அவர்களின் நெறியாள்கையில் பல நாடகங்களில் நடித்து நாடகம் சார்ந்த தன் அறிவை வளர்த்துக்கொண்டார்.
கல்லூரி படிப்பை முடிந்த பின் இவர் இலங்கை வங்கியில் பணியாற்றி வந்தார். பின் ஊடகத்துறை மீது கொண்ட அதீத ஈடுபாட்டின் காரணமாக வங்கிப் பணியை கைவிட்டு முழு நேர அறிவிப்பாளரானார்.
1959ம் ஆண்டு இலங்கை வானொலி நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்ற இவருக்கு எஸ்.பி.மயில்வாகனம் தயாரித்து ராம் சுந்தரலிங்கம் இயக்கிய நான்கு நாடத்தில் ஒன்றை எழுதி நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன் பின் பல வானொலி மற்றும் மேடை நாடகங்களிலும் நடித்திருந்தார்.மேலும் ரூபவாகினி தொலைக்காட்சி சேவையில் செய்தி வாசிப்பாளராகவும் செயற்பட்டார். அதுமட்டுமின்றி சிங்கள மொழியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட கலியுகம் திரைப்படத்தில் நடிகர் ராணி ரணசிங்கத்திற்கு பின்ணணிக் குரல் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பல வானொலி, தொலைக்காட்சி பிரபல்யங்களும், ரசிகர்களும் ஜோக்கிம் பெர்னாண்டோ அவர்களின் மறைவு குறித்த தங்கள் இரங்கலை சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தனர்.