ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.
மலையாள சினிமாவில் கோலோச்சிய நடிகர்களில் அமரர் நெடுமுடி வேணு அவர்களும் ஒருவர். கேரள மாநிலத்தின் ஆலப்புழை, நெடுமுடியில் பிறந்த இவர், 1978 இல் ‘தம்பு’ என்ற மலையாளத் திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அத்துடன், ‘விடா பரயும் முன்பே’ என்ற திரைப்படத்திற்காக 1981 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான ‘ filmfare’ விருதைப் பெற்றார்.
ஆசிரியராக பணியாற்றிய இவர், ‘கலா கவுமுதி' என்ற மலையாள இதழில் பத்திரிகையாளராகவும் பணிபுரிந்திருந்தார். காவாலம் நாராயண பணிக்கர் என்ற புகழ்பெற்ற தியேட்டர் கலைஞரின் நாடகங்கள் மூலமாக மலையாள மக்களின் மனதில் நீங்கா இடத்தைப் பெற்றார். தான் ஏற்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் அவர் கொடுக்கும் ஆகச் சிறந்த நடிப்பும், அசைவுகளும் ரசிகர்களின் பார்வையை அவரை நோக்கி ஈர்க்கவைக்கும். நாடகத்துறையின் வழியாக திரைத்துறைப் பயணத்தை ஆரம்பித்தவர் 500 இற்கும் மேற்பட்ட தமிழ், மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளதுடன், திரைக்கதை, இயக்கம் மற்றும் இசை என பல துறைகளிலும் பரிட்சயம் பெற்றவர்.
மூன்று முறை தேசிய விருதையும், ஆறு முறை கேரள மாநில விருதையும் வென்றதுடன், இவரின் பல திரைப்படங்கள் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
1991 இல் மோகன்லால் கதாநாயகனாக நடித்த ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த உறுதுணை நடிகருக்கான முதல் தேசிய விருதை வென்றார். ‘மார்கம்' படத்திற்காக சிறப்பு பிரிவிலும் தேசிய விருது அவரைத் தேடி வந்தது. 2006 ஆம் ஆண்டு ‘மின்னுக்கு’ திரைப்படத்திற்காக Best Non-Feature Film Narration / Voice Over பிரிவில் மூன்றாவது தேசிய விருதைப்பெற்றார்.
இவ்வாறாக, எண்ணற்ற திரைப்படங்களில் தனது நடிப்பாற்றலால் ரசிகர்களை கட்டிப்போட்ட நெடுமுடி வேணு இன்று 11.10.2021 தனது 73வது வயதில் சிறுநீரகக் கோளாறு காராணமாக காலமானார். இவரது இழப்பானது மலையாள சினிமாவின் பேரிழப்பாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.