x


x

Beta Version
வெள்ளோட்டம்

ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.

பாலஸ்தீனிய திரைப்படங்களின் களமாக மாறிய நெட்ஃபிளிக்ஸ் (Netflix)

12 Oct 2021

அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃபிளிக்ஸ் (Netflix) கடந்த வாரம் பாலஸ்தீனிய திரைப்படங்களின் தொகுப்பொன்றை தமது OTT தளத்தில் வெளியிட்டுள்ளது.

‘பாலஸ்தீனக் கதைகள்' என்று பெயரிடப்பட்டுள்ள இத்தொகுப்பில் 32 திரைப்படங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், இவை பாலஸ்தீனிய திரைப்பட இயக்குனர்களால் உருவாக்கப்பட்ட திரைப்படங்களாகவும், பாலஸ்தீனக் கதைகளைக் களமாகக் கொண்ட திரைப்படங்களாகவும் இருக்கின்றன என்று நெட்ஃபிளிக்ஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது.

அன்னேமேரி ஜாசிர், மாய் மஸ்ரி, மஹ்தி ஃபிளிஃபெல், சூசன் யூசெப், மே ஓடே, ஃபாரா நபுல்சி போன்ற பல சிறந்த மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இயக்குனர்களின் படைப்புகளைக் கொண்ட இந்த தொகுப்பு, அரபு திரைப்படத் துறையின் படைப்பாற்றல் மற்றும் ஆர்வத்திற்கான அங்கீகாரத்தை வழங்கவும், அரபு நாடுகளின் கதைகளிற்கு முதலீடு செய்யவும் உருவாக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இத்தொகுப்பில், மே-ஓடே இயக்கிய ‘தி கிராசிங்' போன்ற விருது பெற்ற பல திரைப்படங்கள் உள்ளடங்குவதால், மாற்று பாலஸ்தீனிய திரைப்படங்களை பரந்த பார்வையாளர்களும் அணுகலாம் என்பதில் நெட்ஃபிளிக்ஸ் திருப்தி அடைவதாகத் தெரிவித்திருந்தது. நெட்ஃபிளிக்ஸின் பாலஸ்தீனிய தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட “அவே மரியா" திரைப்படத்தின் நடிகை ஹுடா அல் இமாம், இது பாலஸ்தீனிய கதைகளின் எல்லைகளை விரிவாக்குகிறது என்று கூறினார்.

A Drowning Man , Xenos மற்றும் A World Not Ours போன்ற திரைப்படங்களின் இயக்குனரான மஹ்தி ஃப்ளீஃபெல், பாலஸ்தீனிய கதைகளில் தன் படைப்பு உள்ளடக்கப்பட்டதற்கும், அதனூடாக உலகளாவிய பார்வையாளர்களை அடைந்ததும் மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார். மேலும் இந்த பெரிய சலுகைக்கு நெட்ஃபிளிக்ஸ் தளத்திற்கு தன் நன்றியையும் தெரிவித்திருந்தார். அதேபோன்று, நமீஃப்ஹ் ‘எம் கதைகள் உலகம் முழுதும் பயணிக்க வேண்டும், மக்கள் எங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் நாங்கள் திரைப்படங்களை உருவாக்குகிறோம்’ என்று கூறியுள்ளார்.

பாலஸ்தீனியக் கதைகளின் தொகுப்பை Netflix.com/PalestinianStories எனும் இணைப்பின் வழியாகவும், Netflix இல் “பாலஸ்தீனக் கதைகள்" என்ற தேடலின் மூலமாகவும் பார்வையிடலாம். இதில் உள்ள பல திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் சிக்கிய சாதாரண பாலஸ்தீனியர்களின் கதைகளை மையமாகக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.