ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.
ரோலிங் ஸ்டோன்(Rolling Stone) அட்டைப்பட சர்ச்சைக் குறித்த பா.ரஞ்சித்தின் ருவிட்டர் பதிவு தமிழ் கலைஞர்களிடையே விரிசலை ஏற்படுத்தியிருப்பதாக Shan vincent de paul சமூக வலைத்தளங்களில் தன் கருத்தைத் தெரிவித்துள்ளார். அமெரிக்க இதழான ரோலிங் ஸ்டோன் மற்றும் மஜ்ஜா(Maajja) இணைந்து வழங்கும் இசைத்தொகுப்பிற்காக வெளியிடப்பட்டிருந்த அட்டைப்படத்தில் Shan vincent de paul மற்றும் Dhee இடம்பெற்றிருந்தனர்.
இதை தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டிருந்த ரோலிங் ஸ்டோன் இதழ் “நீயே ஒளி” மற்றும் “எஞ்சாயி எஞ்சாமி“ பாடல்களுக்கான அங்கீகாரத்தை இவ்விரு பாடகர்களுக்கு மட்டுமே வழங்கி பதிவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, தெருக்குரல் அறிவின் பங்களிப்பிற்கான அங்கீகாரம் வழங்கப்படாதது குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் உட்பட பல இணையவாசிகள் தம் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். இவ்விரு பாடல்களில் “எஞ்சாயி எஞ்சாமி” பாடலை Dhee பாடியிருந்ததுடன், Shan vincent de paul இப்பாடலுக்கு குரல் வழங்கியிருந்தார். அதுமட்டுமின்றி “நீயே ஒளி” பாடலில் ஆங்கில வசனத்தையும் எழுதியிருந்தார். மேலும் பாடகர் மற்றும் ராப்பர் அறிவு “எஞ்சாயி எஞ்சாமி” பாடலை பாடியதுடன் நீயே ஒளி பாடலின் தமிழ் வசனங்களை எழுதியிருந்தார்.
ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்த தன் அறிக்கையை வெளியிட்டிருந்த Shan vincent de paul. இவ் அறிக்கையில் “அறிவுக்கு, இப்போது மட்டுமல்ல தொடர்ச்சியாக நான் உங்கள் பயணத்திற்கு துணையாக இருப்பேன். நீங்கள் பலருக்கு உத்வேகமாக இருக்கிறீர்கள். நாங்கள் இருவரும் தடைகளை மீறி, எங்கள் சமூகங்களுக்கான பிரதிநிதிகளாக வளர்ந்து வருகிறோம். எமது தொழில் துறையில் நிலவும் அரசியலை தடுக்க முடியாது. கலாச்சாரத்திற்கும், பாடல்களுக்குமான உங்களின் பங்களிப்பு என்பது மிகவும் முக்கியமானது என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. உங்களின் கடின உழைப்பை நான் ஒருபோதும் அவமதிக்கவோ, எடுத்துக்கொள்ளவோ முயற்சிக்க மாட்டேன்.
இத் துறையில் முன்னேறி வருவது மிகவும் கடினமான பணி என்பதை நான் அறிவேன். இச் சர்ச்சை குறித்த உரையாடல் ஒன்றை உங்களுடன் நிகழ்த்த விரும்புகிறேன், மேலும் உங்களுடன் இணைந்து செயற்படவும், உங்கள் வளர்ச்சியில் தொடர்ந்து ஓர் பங்காளியாக இருக்கவும் காத்திருக்கிறேன்” என்று Shan vincent de paul குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “பா.ரஞ்சித்தின் ருவிட்டர் பதிவு மற்றும் அது உருவாக்கிய கடுமையான வசைச் சொற்களுமே எனது மிகப்பெரிய பிரச்சினையாகும். அவரது சமூகத்திற்கான பிரதிநிதியாக அவரின் கோரிக்கை நியாயமானதாகவே இருப்பினும் அவர் பொறுப்பற்ற முறையில் தமிழ்க் கலைஞர்களிடையே பிளவின் நெருப்பைத் தூண்டிவிடுகிறார். அவரது பதிவு மூல உரை பற்றிய எந்தக் குறிப்பும் இன்றி பொறுப்பற்ற முறையில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு தவறான தகவலை பகிர்ந்துள்ளது.
நான் ஏன் அட்டைப்படத்தில் இருக்கிறேன், அறிவு ஏன் இல்லை என்பதில் எந்த வித போட்டியும் இல்லை, ஆனால் இன்னும் அவர் தனது சுய காட்சிப்படுத்தலை உருவாக்கிக் கொள்வதற்காக இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்துகிறார். அவர் தனது பதிவில் “நீயே ஒளி” பாடலாசிரியர் என அறிவுக்கு நன்றி தெரிவித்திருந்தார். எனினும் என்னையும் எனது குழுவின் பங்களிப்பையும் குறிப்பிட்டிருக்கவில்லை. அக் காணொளி என் சொந்த ராப்பில், என் படத்தொகுப்பில், என் இணை இயக்கத்தில் உருவானது. பாடலில் அறிவு தமிழ் வசனங்களை மட்டுமே எழுதி பாடலுக்கான தன் பங்களிப்பை செய்திருந்தார். இது எம் இருவரின் இணைப்பினாலேயே சாத்தியமானது, குறித்த அட்டைப்படத்தை அரசியலாக்குவதற்கான தேர்வு அறிவினுடையது. மேலும் இது எங்களிடையே ஒரு விரிசலை உருவாக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஊடகங்கள் இதற்கு வலு சேர்த்து தலைப்புச் செய்திகளில் இதை அடிக்கோடிட்டு காட்டுவதன் மூலம் இதை தொடர்ந்து நிலைநிறுத்த முயற்சிக்கின்றன. அவரது பதிவிலிருந்து மக்கள் என் குணாதிசயத்தை கேள்விக்குள்ளாக்கி, நான் உண்மையில் தமிழன் இல்லை என்று கூறி என் அடையாளத்தை தாக்குகிறார்கள். எனது ராப்ஸை அறிவே எழுதியதாகவும், எனது வெற்றிக்கு நான் தகுதியற்றவன் என்றும் பரிந்துரைக்கின்றனர். மிக முக்கியமான இரண்டு தமிழ் சமூகங்களுக்கிடையே தேவையற்ற முரண்பாட்டை உருவாக்குகிறது.
எங்களுக்குள் பிரிவு தேவையில்லை. நீதி மற்றும் பிரதிநிதித்துவத்திற்கான பா.ரஞ்சித்தின் கருத்தை புரிந்து கொண்டிருந்தாலும் நான் யாருடைய அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கான சிப்பாயாக இருப்பதை விரும்பவில்லை” என்றும் கூறியிருந்தார். இச் சர்ச்சைக் குறித்து தன் அறிக்கையில் மேலும் கூறுகையில், “Rolling Stone இன் இந்தியப் பதிப்பிற்கான அட்டைப்பட விளம்பரப்படுத்தல் “என்ஜாய் என்ஜாமி” மற்றும் “நீயே ஒளி” என்ற இரு பாடல்களை அடிப்படையாகக் கொண்டது என்ற தவறான கருத்து நிலவுகின்றது, அது அப்படி இல்லை. நான் ஐந்து வருடங்களாக செய்துவரும் “Made in jaffna” என்ற பாடலை மஜ்ஜாவுடன் இணைந்து வெளியிடுகிறேன். அதற்கான அட்டைப்படம் ஈழத்தமிழ் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
ஆங்கில அல்பத்திற்கான பணிகளை செய்து வருகின்றோம். மஜ்ஜாவில் எங்கள் இருவரின் இணைப்பில் உருவாகும் முதல் சுயாதீன படைப்பிற்கான பணிகளில் ஈடுபடுகிறோம். இந்த அட்டைப்படம் எங்கள் இருவரின் இணைப்பில் உருவான படைப்பைப் பற்றியதாகும். ரோலிங் ஸ்டோனின் பதிவு இப் பாடலைப் பற்றியதாகும்.
எனவே அறிவின் பெயர் குறிப்பிடப்படாமல் இருந்திருக்கலாம். முதல் இரு பாடலைப் பற்றியதாக இருந்திருந்தால் அறிவின் பெயர் குறிப்பிடப்படாமல் இருப்பது நியாயமற்றது. “என்ஜாய் என்ஜாமி” மற்றும் “நீயே ஒளி” பாடல்களுக்கான அறிவின் பங்களிப்பு மறுக்க முடியாதது. அதை உண்மையான பதிவில் தெரிந்துக்கொள்ளலாம். எனினும் அட்டைப்படம் இந்தப்பாடல்களைப் பற்றியதல்ல, நானும் Dheeயும் இணைந்து விரைவில் வெளிவரக் காத்திருக்கும் பாடலைப் பற்றியதாகும். அறிவு, நவாஸ் மற்றும் மஜ்ஜாவின் ஏனைய கலைஞர்களின் படைப்புகள் வெளியீட்டிற்கு தயாராகும் போது, அவர்களுக்கான வரவேற்பு அசாதாரணமாக இருக்கும். மேலும் மஜ்ஜா மற்றும் ரோலிங் ஸ்டோன் இந்தியா நிச்சயம் அவர்களை ஊக்குவிக்கும்.
அனைத்துக் கலைஞர்களுக்கும் தங்கள் கதைகளைச் சொல்லவும், பிரகாசிக்கவும் போதுமான இடம் இங்கு உள்ளது. அவர்களது பங்களிப்புகள் யாராலும் மறுக்கப்படக் கூடாதது. இவை அனைத்தும் எவ்வாறு வெளிவந்தன என்பதில் நான் அதிருப்தி கொள்கிறேன். நான் அறிவு, நவாஸ் மற்றும் மஜ்ஜாவின் ஏனையக் கலைஞர்களின் படைப்புகளுக்காகக் காத்திருக்கிறேன். மேலும் சுயாதீனத்துறையில் இது ஒரு புது ஆரம்பமாக இருக்கும்” என்று Shan vincent de paul. தன் அறிக்கையில் கூறி முடித்துள்ளார்.