x


x

Beta Version
வெள்ளோட்டம்

ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.

பிரெஞ்சு நாட்டு சினிமா வரலாற்றில் தனக்கென தனியிடம் பதித்த ஆளுமை ஒன்று மறைந்தது.

06 Sep 2021

பிரெஞ்சு நாட்டு சினிமாவில் ஏற்பட்ட புதிய அலையில் தாக்கம் செலுத்திய ஆளுமைகளுள் ஒருவரான ஜீன்-பால் பெல்மொண்டோ (Jean-Paul Belmondo) தனது 88வது அகவையில் இன்று (06.09.2021) காலமானார்.

தனது பாரிஸ் வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில், இவர் நெடு நாட்களாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்னாரின் இறுதிக்கிரியைகள் மற்றும் ஆராதனைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (10.09.2021) முற்பகல் செயின்ட் ஜெர்மன் டிஸ் ப்ரீஸ் தேவாலயத்தில் நடைபெறவுள்ளதுடன், இவரின் திரையுலக சாதனைகளை கௌரவிக்கும் முகமாக இன்வெலிடிஸ் சதுக்கத்தில் 09.09.2021 அன்று தேசிய அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

09.04.1933 அன்று பாரிஸின் நெயுலி சர் செயினே என்ற புறநகரில் பிறந்த இவர் திரையுலகிற்குள் பிரவேசிக்க முன்னர் சிறந்த குத்துச்சண்டை வீரராகவும், மேடை நாடகக் கலைஞராகவும் ரசிகர்களை கவர்ந்தவர். 1956 இல் Molière எனும் குறும்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் தன் நடிப்புத் திறனாலும், எளிமையாலும் பெரும் ரசிகர் பட்டாளத்தை தன்வசம் ஈர்த்தார்.இவரது Breathless (1960), That Man from Rio ( 1964), Pierrot le Fou (1965) போன்ற திரைப்படங்கள் திரையுலக வரலாற்றில் அவரிற்கான தனியிடத்தை பெற்றுக்கொடுத்தன.

இவர் 1989 இல் சிறந்த நடிகருக்கான சீசர் விருதை(César Awards) வென்றது மட்டுமின்றி, 42வது சீசர் விருது விழாவின் போது வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார். பிரெஞ்சு நாட்டின் அதிபரான எமானுவெல் மக்ரோன் நடிகர் Jean-Paul Belmondo அவர்களின் இறப்பு குறித்து வெளியிட்ட இரங்கல் செய்தியில் “இவர் நாட்டின் தேசிய சொத்து” என்று கூறியிருந்தார். மேலும் இவரின் மறைவு தொடர்பாக திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் தம் இரங்கல் செய்தியை பகிர்ந்து வருகின்றனர்.