ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.
தே.சேவியர் என்ற இயற்பெயரைக்கொண்ட ஈழத்தின் மூத்த எழுத்தாளரான நந்தினி சேவியர் இன்று (16.09.2021) காலை திருகோணமலையில் காலமானார்.
1949 மே மாதம் 25ம் திகதி யாழ் தென்மராட்சி மட்டுவில் பிரதேசத்தில் பிறந்த அவர் தனது பாடசாலைக் கல்வியை முடித்த பின் யாழ் தொழில்நுட்பக் கல்லூரியில் பயின்றார். 1967ம் ஆண்டு எழுத்துத்துறையில் தடம் பதித்த இவர் இலக்கியத்துறைக்கும், சமூகத்திற்கும் ஆற்றிய பணிகள் எண்ணிலடங்காதவை. இவரது எழுத்தில் உருவான பல படைப்புகள் தாயகம், வாகை, அலை, வீரகேசரி, ஈழநாடு, ஈழமுரசு உட்பட பல பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டு வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இவரின் பல படைப்புகள் தேசிய ரீதியிலான அங்கீகாரத்தைப் பெற்றிருந்தாலும் பல நூல் வடிவம் பெறமுடியாத நிலையிலேயே உள்ளன.
“நந்தினி சேவியர் சிறுகதைகள்” என்ற முருகையனின் கட்டுரைகள் 2012ம் ஆண்டு தரம் 10 தமிழ்மொழியும் இலக்கியமும் பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவரின் இலக்கியப் பங்களிப்பிற்காக 2015ம் ஆண்டு கொடகே வாழ்நாள் சாதனையாளர் விருதும், 2012ல் சாகித்திய மண்டல பரிசும், 2013ல் கலாபூஷணம் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இன்ன பிற அங்கீகாரங்களுக்கும் உரித்துடைய நந்தினி சேவியர் அவர்களின் மறைவு இலக்கியத்துறைக்கு பேரிழப்பாகும்.