ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.
தமிழ் இலக்கியகர்த்தாவான த.துரைசிங்கம் அவர்கள் 23.08.2021 அன்று காலமானார். இவர் யாழ்ப்பாணம் - புங்குடுதீவில் 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி தம்பிராசா, சிவபாக்கியம் ஆகியோருக்கு புதல்வராகப் பிறந்தார். அவர் தனது ஆரம்பக் கல்வியை புங்குடுதீவு மேற்கு அமெரிக்க மிசன் தமிழ் கலவன் பாடசாலையிலும், சுப்பிரமணிய வித்தியாசாலையிலும் கற்றார். மேலும், நல்லூர் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்று, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைச் சிறப்புப் பட்டம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வியியலில் டிப்ளோமா பெற்றார்.
அதனை தொடர்ந்து ஆசிரியர், அதிபர், கோட்டக்கல்வி அதிகாரி, மாவட்டக் கல்விப் பணிப்பாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர், பன்னூலாசிரியர் என பன்முக ஆளுமை கொண்டவராக திகழ்ந்தார். ஈழத்து இலக்கிய உலகில் சிறுவர் இலக்கியத்திற்காக தனது வாழ்நாளில் பெரும் பகுதியை செலவிட்ட அமரர் த. துரைசிங்கம் அவர்கள் 45 சிறுவர் நூல்கள், பதினைந்து கட்டுரை நூல்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பாடநூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
இவரின் எழுத்தில் உருவான படைப்புகள் பல விருதுகளை பெற்றதுள்ளமை குறிப்பிடத்தக்கது. த.துரைசிங்கம் அவர்களின் எழுத்தில் உருவான ‘குழந்தை பாடல்கள், பாடுபாப்பா, பாப்பா பாட்டு’ போன்ற நூல்கள் இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருதை பெற்றதுடன், ‘பாட்டுப் பாடுவோம்’ நூல் 1997ஆம் ஆண்டு சாகித்திய மண்டல விருதையும், வடக்கு கிழக்கு மாகாண சாகித்திய விருதையும் பெற்றது. மேலும் 1990 ஆம் ஆண்டு இந்து கலாசார அமைச்சினால் ‘இலக்கிய கலாவித்தகர்’ எனும் பட்டமும் வழங்கி இவர் கௌரவிக்கப்பட்டார்.
இவர் தன் மறைந்த சகோதரர் நாவேந்தன் நினைவாக வருடாந்தம் ‘நாவேந்தன் விருது’ வழங்கி வந்தார். 1953ல் புங்குடுதீவில் ‘பாரதி கழகம்’ அமைப்பை நிறுவி பாரதி விழாக்களையும் கலை நிகழ்ச்சிகளையும் நடாத்தியமை மற்றும் யாழ்ப்பண மாவட்ட சனசமூக நிலையங்களின் சமாசத்தின் வெளியீடான 'சமூகத் தொண்டன்' எனும் மாத இதழின் உதவி ஆசிரியராகவும் பணியாற்றியமை இவரது இலக்கியப் பணிகளில் சிலவாகும்.
இவ்வாறு, மாணவர்கள் கல்விக்கும், சிறுவர் இலக்கிய படைப்புகளுக்கும் தன் வாழ்வை அர்ப்பணித்த த.துரைசிங்கம் அவர்கள் 23.08.2021 காலை தனது 84வது அகவையில் கொழும்பில் காலமானார்.