ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.
72 ஆவது பேர்லின் சர்வதேச திரைப்பட விழா 2022 பெப்ரவரி 10 தொடக்கம் 20 ஆம் திகதி வரை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்விழாவில், சர்வதேச நடுவர் மன்றத்தின் தலைவராகப் பணியாற்ற இந்திய-அமெரிக்க திரைப்பட இயக்குனரும், திரைக்கதை ஆசிரியரும், தயாரிப்பாளருமான எம்.நைட் ஷியாமலன் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் மஹேயில் 1970 ஆகஸ்ட் 6ஆம் திகதி பிறந்து, பென்சில்வேனியாவின் பென் பள்ளத்தாக்கில் வளர்ந்தவர். 1992 இல் தனது முதல் திரைப்படமான ‘பிரேயித் வித் ஆங்கர்’ மூலம் இயக்குநராக திரையுலகிற்கு அறிமுகமானார். அவரது இரண்டாவது திரைப்படம் நகைச்சுவை நாடகத் திரைப்படமான வைட் அவேக் (1998) ஆகும். இவரது திரைப்படங்களில் அமானுஷ்ய த்ரில்லர் திரைப்படமான தி சிக்ஸ்த் சென்ஸ் (1999), சூப்பர் ஹீரோ த்ரில்லர் திரைப்படம் அன் பிரேக்கபிள் (2000), அறிவியல் புனைகதை த்ரில்லர் திரைப்படம் சைன்ஸ் (2002) மற்றும் பீரியட்-பீஸ் த்ரில்லர் திரைப்படமான தி வில்லேஜ் (2004) ஆகியவை பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.
தி சிக்ஸ்த் சென்ஸ் திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த அசல் திரைக்கதைக்கான ஒஸ்கார் விருதுக்காக இவர் பரிந்துரைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு, வணிக ரீதியாக வெற்றியடைந்த பல திரைப்படங்களை உருவாக்கினார். ஆஃப்டர் எர்த் வணிக ரீதியான தோல்வியைத் தொடர்ந்து, உருவாக்கப்பட்ட தி விசிட் (2015), ஸ்ப்ளிட் (2016) மற்றும் கிளாஸ் (2019) ஆகிய திரைபடங்களின் வெளியீட்டின் பின் இவரின் வாழ்க்கை புத்துயிர் பெற்றது. மொத்தம் $ 34 மில்லியன் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இம் மூன்று திரைப்படங்களும் இணைந்து பாக்ஸ் ஆபிஸில் $ 625 மில்லியனை சம்பாதித்திருந்தன.
கிராஃபிக் நாவலான சாண்ட்காஸ்டை அடிப்படையாகக் கொண்ட அவரது சமீபத்திய திரைப்படமான ‘ஓல்ட்’ 2021 ஆம் ஆண்டு கோடையில் சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டதுடன், தற்போது தனது அடுத்த திரைப்படமான நாக் அட் தி கேபினில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இது 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைப் பிடித்துக்கொண்ட இவர், நியூயார்க் பல்கலைக்கழகத்தின் டிஷ் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸில் கல்லூரியில் திரைப்பட இயக்கத்தைக் கற்றுக்கொண்டார். இங்கு இறுதியாண்டு மாணவனாக தனது முதல் திரைப்படமான பிரேயிங் வித் எங்கரை உருவாக்கினார். இத் திரைப்படம் டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருந்தது. அத்துடன், 2008 ஆம் ஆண்டு இந்திய அரசால் பத்மஸ்ரீ விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 72 ஆவது பேர்லின் சர்வதேச திரைப்பட விழாவின் சர்வதேச நடுவர் மன்றத்தின் தலைவராக பணியாற்ற உள்ள எம்.நைட் ஷியாமலன் அவர்கள் “ஹாலிவுட் திரையுலகில் எப்போதும் நான் ஒரு சுயாதீன திரைப்பட இயக்குனராகவே உணர்கிறேன். அவ்வாறிருக்கையில், பெர்லினாலேவின் ஒரு பகுதியாக இருக்கும்படி கேட்கப்பட்டதை அர்த்தமுள்ளதாக எண்னுகிறேன்” எனத் தெரிவித்தார்.
எம். நைட் ஷ்யாமலன் அவர்களாஇ நடுவராகத் தேர்வு செய்தமை தொடர்பில் பெர்லினாலே கலை இயக்குனர் கார்லோ சட்ரியன், “நடுவர் மன்றத்தின் தலைவராக பணியாற்றுவதற்கான அழைப்பை எம். நைட் ஷ்யாமலன் ஏற்றுக்கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவரது வாழ்க்கை முழுவதும் அவர் தனக்கென தனி உலகை வடிவமைத்தார். அதில் அச்சங்களும் ஆசைகளும் அருகருகே நிலை கொண்டுள்ளன. அங்கு இளைஞர்கள் கதாநாயகர்களாக மட்டுமல்லாமல் அச்சத்தை வெல்லும் உந்து சக்தியாகவும் உள்ளனர். யுஎஸ் திரைப்படத் தொழிலுக்கு ஷ்யாமலன் ஒரு தனித்துவமான நபர். தன் பார்வைக்கு உண்மையாக இருக்கும் ஒரு திரைப்பட இயக்குனர். இவ் உண்மைத்தன்மையை நாம் எமது தேர்வுகளின் வழி தேடுகிறோம்” என கூறினார்.