ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.
யுத்த கால இனவழிப்பின் பல யதார்த்தங்களினை வெளிக்கொணர்ந்த, தனிப்பட்ட ஒருவரின் உண்மைக்கதையினை மையப்படுத்தி எடுக்கப்பட்ட முழுநீளத் திரைப்படமே “பொய்யா விளக்கு” ஆகும். உலகம் முழுவதுமான திரைப்பட விழாக்களில் 15 இற்கும் மேற்பட்ட விருதுகளினை தட்டிச்சென்றதோடு மட்டுமல்லாது பலரின் பாராட்டுக்களினையும் பெற்றுள்ளது.
அமெரிக்கா, கனடா, லண்டன் போன்ற நாடுகளில் பிரத்தியேகமாக திரையிடப்பட்டு, இன்னும் பல நாடுகளில் திரையிடலுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கையில், இத்திரைப்படத்தினை இணையத்தளத்தின் மூலம் கட்டணம் செலுத்தி பார்க்கக் கூடிய வசதியினை திரைப்படக் குழுவினர் ஏற்படுத்தியுள்ளனர்.
2009 ஆம் ஆண்டில் திட்டமிட்டு நடாத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் போது களத்தில் நின்று பணியாற்றிய வைத்தியர் வரதராஜா அவர்களினுடைய உண்மைக் கதையினை அப்பட்டமான முறையில், கோரக்காட்சிகளை தவிர்த்தும் பல யதார்தங்களினை வெளிக்கொண்டு வந்தும் இனிமையான இசை மற்றும் செழுமையான ஒளிப்பதிவினைக் கையாண்டு ஈழத்திற்கான ஆவணமாகவும், ஆதாரமாகவும் அமையும் வகையில் ஈழத்தமிழரும், கனடாவில் வசிப்பவருமான இயக்குனர் தனேஷ் கோபால் அவர்களினால் இந்த திரைப்படம் இயக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இயக்குனர் குறிப்பிடுகையில், ”பொய்யா விளக்கு எங்களின் கதைகளை நாங்களே செய்ய வேண்டும் - நாங்கள் தான் செய்ய வேண்டும் என்ற உண்மையினை பறைசாற்றுகின்ற படமாக இருக்கும். இவ்வாறான முயற்சிகள் இதுவரை எங்களால் முன்னெடுக்கப்படவில்லை. பொய்யா விளக்கு இதற்கானதொரு முதற்பாலமாக இருக்கும்” என்கின்றார். ஆறாத வடுக்களாக உள்ள எங்களுடைய மக்களின் கதைகளினை சர்வதேச தளத்திற்கு எடுத்துச் செல்லும் இவ்வாறான படைப்புகள் தரமானதொரு அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கலாம்.