ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.
15 வருடங்களாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியான தேவதாசன் அவர்கள் இன்று (24.06.2023) விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்பு கோட்டை புகையிரத நிலையக் குண்டுத் தாக்குதலுக்கு உதவியதாக 2009ம் ஆண்டு கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டார்.
விசாரணை இன்றி ஏழு வருடங்களுக்கு மேலாக சிறையில் வைக்கப்பட்டவர். சிறைக்குள்ளிருந்து தனக்காகத் தானே போராடியதன் விளைவாக அவருடைய வழக்கு விசாரணைக்கு வந்தது. அதன் பின் இவருக்கு 20 வருடகால சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
இவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் "தமிழீழ மக்கள் புரட்சி பேரவை" என்னும் தீவிர இடதுசாரி இயக்கத்தை ஆரம்பித்து தமிழ் இளைஞர்கள் மத்தியில் அரசியல் வகுப்புகள் நடாத்திவந்தார். இவருடைய அரசியல் வகுப்புகள் மூலம் பல இளைஞர்கள் அரசியல் அறிவைப் பெற்றுக்கொண்டனர்.
அதுமட்டுமல்லாது அடிப்படை சினிமா அறிவு ஏதும் இல்லாமல் சினிமா செய்ய முற்பட்ட பல இளைஞர்களுக்கு தன்னால் முடிந்தளவு அடிப்படை சினிமா அறிவை வழங்கிக் கொண்டிருந்தார். பின்னர் தன் சொந்த பிரயத்தனத்தின் ஊடாக ‘இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின்’ பணிப்பாளர் சபையில் அங்கத்தவரானார். அவருடைய முயற்சியில் இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் ‘தமிழ் பிரிவு’ உருவானமை குறிப்பிடத்தக்கது.
2000 ஆம் ஆண்டுகளின் ஆரம்பங்களிலேயே "சலனச்சித்திரம்" என்னும் சினிமா இயக்கத்தை ஆரம்பித்து சினிமா மீது காதல் கொண்டு அலைந்து கொண்டிருந்த பல தமிழ், முஸ்லிம் இளைஞர்களுக்கு சினிமாவைக் கற்பித்து அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் விளங்கினார்.
15 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிவதாசன் அவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.